வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக 4 வயது குழந்தையைக் காரில் கடத்தி சென்ற நபரைப் போலீசார் கைது செய்தனர்.
காமாட்சியம்மன்பேட்டையை சேர்ந்த வேணு – ஜனனி தம்பதிக்கு 4 வயதில் யோகேஷ் என்ற குழந்தை உள்ளது. வேணு தனது குழந்தையை வழக்கம் போல பள்ளியில் இருந்து அழைத்த வந்தபோது காரில் காத்துக்கொண்டிருந்த சிலர் அவர்மீது மிளகாய் பொடியைத் தூவிவிட்டு குழந்தையைக் கடத்தி சென்றனர்.
இந்தச் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மாதனூர் சாலையில் தனியாக நின்றுக்கொண்டிருந்த குழந்தை யோகேஷை மீட்டனர்.
இதனையடுத்து வேணு குடியிருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதில் வேணு மீது இருந்த முன்பகை காரணமாகவும், பண தேவை இருந்ததாலும் குழந்தையைப் பாலாஜி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
குழந்தை கடத்தல் சம்பவம் ஊடகங்களில் பரவியதால் அச்சமடைந்த பாலாஜி பாதி வழியில் யோகேஷை இறக்கிவிட்டுவிட்டு காவல்துறைக்கு தகவலளித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பாலாஜியின் கூட்டாளியான விக்ரம் என்பவரைத் தேடிவருகின்றனர்.