காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு இந்தியப் பிரதமர் மோடி துணை போவதாகப் பேசிய ஈ.வே. ராமசாமி ஆதரவாளர்களின் பேச்சுக்குக் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காத போலி புரட்சியாளர்கள், பிரதமர் மோடிக்கு எதிரான வன்மத்தை கக்கியிருப்பது திட்டமிட்ட சதி என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் காஸாவிற்கு இடையிலான போரில் இதுவரை சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வரும் போர் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி பதவியேற்றபின்பு, இதுவரை இல்லாத அளவிற்கு பாலஸ்தீனத்திற்கு இந்தியா பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாகப் பாலஸ்தீன படுகொலைக்கு எதிரான பேரணி எனும் தலைப்பில் போலிப் போராளிகள் சிலர் அரங்கேற்றிய நாடகம் அம்பலமாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இப்பேரணியில் திரையுலக போலிப் போராளிகளாக விமர்சிக்கப்படும் சத்யராஜ், வெற்றிமாறன், அமீர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இஸ்ரேல் – காஸா போருக்கு அமெரிக்காவுடன் இணைந்து பிரதமர் மோடியும் துணை நிற்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அதிமுக ஆட்சி என்றால் ஆட்சிக்கு எதிராகப் பொங்கி எழுவதும், திமுக ஆட்சி என்றால் கொடுத்த தொகையை வாங்கிக் கொண்டு எதுவுமே பேசாமல் அமைதி காப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இந்தப் போலி புரட்சியாளர்கள், பிரதமர்மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பல்வேறு தரப்பினர் தங்களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றபின் பாலஸ்தீன நாட்டிற்கு நிதியுதவி, உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் உதவி புரிந்துள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் அந்நாட்டிற்கு உட்கட்டமைப்பு, ஐ டி டெக் பார்க், மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு 141 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்தியா நிதியுதவி அளித்துள்ளது. மேலும் பாலஸ்தீனத்திற்கு உதவும் ஐக்கிய நாடுகளின் நிதி அமைப்பிற்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியைக் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்தியா வழங்கி வருகிறது. இந்திய பிரதமர்கள் யாருக்கும் கிடைக்காத பாலஸ்தீன நாட்டின் உயரிய விருதுப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டதே அவர் செய்த நற்காரியங்களுக்கு சான்றாக அமைந்திருக்கிறது.
பாலஸ்தீனத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் மோடியை விமர்சிக்க வேண்டும் என்பதற்காகவே, உண்மை நிலையைத் துளியளவும் அறிந்திராத அமீர், பிரகாஷ்ராஜ், வெற்றிமாறன் ஆகியோரை மேடையேற்றிப் பேச வைத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கொடைக்கானலில் வன நிலத்தில் சட்டவிரோதமாக வீடுகட்டிய பிரகாஷ்ராஜ், லாக்கப் மரணம்குறித்து சினிமா எடுத்துக் கல்லா கட்டிய வெற்றிமாறன், திமுகவுக்கு முட்டு கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கும் சத்தியராஜ், போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய அமீர் ஆகியோர் பிரதமர் மோடியை விமர்சிப்பதா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
பாலஸ்தீன படுகொலைக்கு ஆதரவாகப் பேரணி நடத்தியவர்கள் தமிழகத்தில் நடக்கும் அநீதிக்குக் குரல் கொடுத்திருக்கிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, நாள்தோறும் அதிகரிக்கும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, போதைப் பொருள் தாராளப் புழக்கம் ஆகியவை குறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காத இவர்கள் பாலஸ்தீன மக்களுக்காக பேரணி நடத்தியிருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணம், வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த அவலம், அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் எனத் தமிழகத்தில் அரங்கேறும் அவலங்களைக் கண்டும் காணாத போலிப் போராளிகள், தற்போது காசா போரை நிறுத்தப் புறப்பட்டிருப்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டபோதும், ஏமனில் நீடிக்கும் போர் குறித்தும் வாய் திறக்காமல் இருந்த இவர்கள், தற்போது திடீரெனப் பேரணி நடத்தியிருப்பதன் பின்னணியில் பெரிய சதித்திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் – காசா இடையேயான போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவர்கள் பேரணி நடத்துவதும், பிரதமர் மோடியை விமர்சிப்பதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இப்பேரணியில் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் பின்னணியையும், கடந்த கால செயல்பாடுகளையும் ஆராய்ந்தால் இப்பேரணி தற்போது நடைபெற்றதற்கான அவசியத்தை புரிந்து கொள்ளலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.