வெள்ளை அறிக்கை கேட்டதற்கு வெள்ளை காகிதத்தை காண்பித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. வேடசந்தூர் பகுதியில் மக்களிடையே பேசினார். முதலில் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் – கரூர் பிரதான சாலையில் குழுமியிருந்த எராளமான மக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
“திண்டுக்கல் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. வேடசந்தூர் தொகுதியில் தெரியும் எழுச்சியின் மூலமாக இங்கு அதிமுக வெற்றி உறுதியாகிவிட்டது.
திமுகவின் நான்காண்டு ஆட்சி காலத்தில் ஏதாவது பெரிய திட்டம் இந்த தொகுதிக்கு கொண்டு வந்தார்களா? என கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கையை ஏற்று, 350 கோடியில் மதிப்பில் அற்புதமான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து, ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கச் செய்தோம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது இதேபோல தமிழகத்தின் பல மாவட்டங்களில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம்.
10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து வரலாற்று சாதனை படைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நாலாண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டுவருவதற்கு திராணியற்றது இந்த விடியா திமுக அரசு. பொம்மை முதல்வர் ஆள்வதால் மகக்ளுக்குத் தேவையான திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தொழில் துறை அமைச்சர், ஒரு வெள்ளை காகிதத்தைக் காட்டி இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். எவ்வளவு ஏத்தம் இருந்தால் இப்படிப் பேசுவார்..? நாட்டில் பல லட்சம் பேர் வேலையில்லாமல் சிரமப்படுகிறார்கள்.
இந்த 52 மாத ஆட்சியில் 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், 10.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், 32 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் 75% ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டதாகவும் ஸ்டாலின் சொன்னார்.
ஸ்டாலின் அவர்களே, டி.ஆர்.பி ராஜா அவர்களே… இதற்கு நீங்கள்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டது என்று சொன்னால், அதில் 75% நிறைவேற்றப்பட்டது என்று சொன்னால் சுமார் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். இத்தொகுதியில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது?
32 லட்சத்தில் 75% என்றால் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டுமே…. சொல்வது அத்தனையும் பொய்.
பிரதான எதிர்க்கட்சி மக்களுடைய பிரச்னைகளை எடுத்துச்சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், 10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகச் சொன்னதற்கு வெள்ளை அறிக்கை கேட்டேன். தொழிலின் நிலை என்ன? எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று விளக்கம் கேட்டால், வெள்ளை காகிதத்தை காட்டுகிறார்.
டிஆர்பி ராஜா அவர்களே, உங்களுடைய ஆட்சி வெற்று விளம்பர ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தைக் காட்டி நிரூபித்துவிட்டீர்கள். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அங்கு ஒன்றுமே இல்லை. எனவே வெள்ளை காகிதத்தைத் தான் காட்டியாக வேண்டும். இந்த ஆட்சியில் அத்தனையும் பொய், பொய் தவிர்த்து வேறு ஒன்றுமேயில்லை என்றும் இபிஎஸ் பதிலடி தந்தார்.