கோவையில் 5001 கொலுபொம்மைகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் கொலு மண்டபத்தைப் பக்தர்களும், பார்வையாளர்களும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளால் களைகட்டி வருகிறது.
கோவை மருதமலை பகுதியில் உள்ள வள்ளியம்மன் கோயில் மண்டபத்தில் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதங்களில் கலைநிகழ்ச்சிகள் களைகட்டி வரும் நிலையில், அங்குப் பிரம்மாண்டமாகக் காட்சிபடுத்தப்பட்டுள்ள கொலு கண்காட்சியையும் ஏராளமான பொதுமக்கள் பிரம்மிப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்பப் பொம்மைகளை வழங்குவதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பதால், நடப்பாண்டில் 5001 கொலு பொம்மைகளுடன் கொலு பொம்மை மண்டபமே உருவாக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி திருவிழா ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் நிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் நம் வாழ்வியல் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருப்பதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புதிய பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலைநிகழ்ச்சிகள், கர்நாடக சங்கீதம் எனச் சிறப்பாக நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் சிறுவர், சிறுமிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பக்தி பாடல்களை பாடி கொலு மண்டபத்திற்கு கூடுதல் அழகூட்டுகின்றனர். பக்தியின் பிரதிபலிப்பை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கொலு பொம்மைகளின் சிறப்பை சிறுவர், சிறுமிகள் ஆர்வத்துடன் கேட்டுச் செல்கின்றனர்.
கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி கொலு வரும் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான கொலு பொம்மைகளை உள்ளடக்கிய இந்தக் கொலு மண்டபம் பக்தர்களுக்கும், பார்வையாளர்களுக்குப் பக்தியுடன் கூடிய பரவசத்தை ஏற்படுத்தக் கூடிய இடமாக அமைந்திருக்கிறது.