கோவையில் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 4வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர்.
கோவை அவிநாசி சாலை அண்ணா சிலை அருகே உள்ள சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்திலும், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகுணா குரூப் அலுவலகத்திலும் சோதனை, நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் உடுமலைப்பேட்டை அலுவலகம், கணபதிபாளையம் மற்றும் வரதராஜபுரத்தில் உள்ள கோழி தீவன உற்பத்தி தொழிற்சாலைகளிலும் சோதனை நடைபெற்றது. மேலும், நாமக்கல் மோகனூர் ரோட்டில் கோழிப் பண்ணை அதிபர் வாங்கிலி சுப்பிரமணியத்திற்கு சொந்தமான திருச்சி ரோட்டில் உள்ள அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அவிநாசி சாலை அலுவலகத்திலும், ரேஸ்கோர்ஸ் அலுவலகத்திலும் நான்காவது நாளாக இன்றும் சோதனை நீடித்து வருகிறது.