கொலம்பியாவில் உள்ள தங்க சுரங்கத்திற்குள் 48 மணி நேரம் சிக்கித் தவித்த 23 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அன்டியோகியா மாகாணத்தில் உள்ள ARIS MINING நிறுவனத்திற்கு சொந்தமான தங்க சுரங்கம், கடந்த 23-ம் தேதி சரிந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தால் உள்ளே பணியாற்றிக்கொண்டிருந்த 23 தொழிலாளர்கள் உள்ளே சிக்கி உயிருக்காகப் போராடினர்.
தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு மேல் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்த நிலையில், துரிதமாகச் செயல்பட்ட மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர்.
தொழிலாளர்கள் ஒவ்வொருவராக வெளியே வருவதை கண்டு, அவர்களுக்காக வெளியே காத்திருந்த உறவினர்கள் தொழிலாளர்களைக் கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்றனர்.
இந்நிலையில், சுரங்கத்தினுள் சிக்கியிருந்த தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் காற்றோட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக ARIS MINING நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொலம்பியாவில் அதிக சுரங்க விபத்துகள் நடப்பதாகவும், சட்டவிரோத சுரங்கங்களில் ஏற்படும் விபத்துகள் காரணமாகப் பல உயிரிழப்புகள் பதிவாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
















