ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு குறித்த புகாரில் மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென மத்திய அரசின் ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேஸ்வரர் கோயில், சூரிய தலங்களில் முக்கிய தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கோயிலின் ராஜகோபுரம் முன்பு உள்ள 31 சென்ட் நிலம் போலி பட்டா பெற்று கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளதாகவும், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த மத்திய அரசின் ஜவுளித்துறை ஆலோசனை குழு உறுப்பினர் நாகபூஷணம் குற்றம்சாட்டியுள்ளார். கோயில் ராஜ கோபுரம் முன்பு கண்டெடுக்கப்பட்ட புதையலை அறநிலையத்துறை அதிகாரிகள் மறைத்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து காலணி மாலை அணிவிக்கும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ள அவர், கோயில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
















