கோவை மாவட்டம், காளப்பட்டியில் வங்கி கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளரை ஆள் வைத்து தாக்கிய மேலாளர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை காளப்பட்டியில் இயங்கி வரும் தனியார் வங்கியில், கார்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தினர் கடந்த 7 வருடங்களாக நடப்பு வங்கி கணக்கை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி அந்த நடப்புக் கணக்கின் செயல்பாடுகள் திடீரென வங்கி தரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து அந்நிறுவனத்தினர் தரப்பில், தனியார் வங்கி கணக்கை நிறுத்தி வைத்ததற்கான காரணம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த தனியார் வங்கி மேலாளர் செந்தில்குமார் என்பவர், சைபர்கிரைம் போலீசாரே வங்கி கணக்கை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
விசாரணையில் தனியார் வங்கி மேலாளர் செந்தில்குமார் கூறியவை அனைத்தும் பொய் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தனியார் வங்கி மேலாளர் செந்தில்குமார் ஆட்களை ஏவி தாக்குதல் நடத்தியதில், கார்களை வாடகைக்கு விடும் நிறுவன உரிமையாளரான பிரஜித் குமாரை படுகாயமடைந்துள்ளார். புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.