அமெரிக்காவில் 73 வயது நிரம்பிய சீக்கிய மூதாட்டியை குடியுரிமை அதிகாரிகள் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்…
அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த 73 வயது நிரம்பிய மூதாட்டியை அங்குள்ள அதிகாரிகள் நாடு கடத்தி உள்ளனர். மூதாட்டி என்று கூட பாராமல் அவரது கையில் கைவிலங்கு மாட்டி கடைசியாக குடும்பத்தினரிடம் கூட சந்திக்கவிடாமல் நாடு கடத்திய சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஜித் கவுர் என்பவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், 2 மகன்களுடன் பஞ்சாப்பில் வசித்து வந்த ஹர்ஜித் கவுர், கடந்த 1992-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றதாக தெரிகிறது. வடக்கு கலிபோர்னியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த அவர், அங்குள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். ஹர்ஜித் கவுர் உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதுமே சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதாக அறிவித்தார். இதனால் ஹர்ஜித் கவுரும் பாதிக்கப்பட, அவரை அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் ஈவு இரக்கமின்றி நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
70 மணி நேரமாக ஹர்ஜித் கவுரை சிறைபிடித்து வைத்திருந்த அதிகாரிகள், வயதான பெண்மணி என்று கூட பார்க்காமல், கொடுமைப்படுத்தியுள்ளனர். உறங்குவதற்கு படுக்கை கொடுக்காமல் அலைக்கழித்த அதிகாரிகள், அவரை தரையில் படுத்து உறங்கச்செய்துள்ளனர்.
வயதான காலத்தில் மாத்திரைகள் உட்கொள்ளும் நபருக்கு, உணவளிக்காமல் இருந்த அதிகாரிகள், ஹர்ஜித் கவுர் கோரிக்கை விடுத்தும் அதை நிராகரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் செமிக்கவே செய்யாத சீஸ் சாண்ட்விச்சை கொடுத்துள்ளனர். பின்னர் மருந்துகள் உட்கொள்வதற்கு தண்ணீர் கேட்டபோது, ஐஸ் கட்டிகளை கொடுத்து மனிதாபிமானமற்றவர்களை போல் நடந்து கொண்டுள்ளனர்.
இதனை ஹர்ஜித் கவுரின் வழக்கறிஞர் இன்ஸ்டாகிராமில் பதிவிட, அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.