கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து வாகனம் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதையடுத்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.