கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உட்பட 4 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள தவெக கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக கரூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை அதிகாரியாக கரூர் நகர DSP செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதல் குற்றவாளியாக மதியழகனும், 2ஆவது குற்றவாளியாக ஆனந்தும் சேர்க்கப்பட்டுள்ளனர். மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல், அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காமல் இருத்தல் உட்பட ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.