மழைக்காலங்களில் சென்னை மெட்ரோவை பொதுமக்கள் நம்பலாம் என மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கானா சபையில் கரிகாலன் சோழன் பெருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, கூடுதல் தலைமைச் செயலாளர் மதிவதனன் மற்றும் மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜுனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ஜுனன், சென்னையில் 2வது கட்டமாக 112 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மெட்ரோ திட்ட பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
நகர மயக்கமாக்கலுக்கு மெட்ரோ ரயில் உதவுகிறது என்றும், மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், மழைக்காலங்களில் மெட்ரோ சுரங்க பாதையில் தேங்கும் தண்ணீரை அதிநவீன மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தி வருவதாக கூறிய அவர், சென்னையில் கனமழை பெய்தாலும் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என தெரிவித்தார்.