அர்ஜென்டினாவில் 3 இளம்பெண்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உலுக்கிய இந்தக் கொடூர சம்பவம்குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்..
அர்ஜென்டினாவில் காணாமல் போனதாக நம்பப்பட்ட3 இளம்பெண்களைப் போதைப்பொருள் கடத்தும் கும்பல் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்ததுடன் மட்டுமில்லாமல் அதனை இன்ஸ்டாகிராமில் நேரலை செய்த மிருகத்தனமான செயல், பொதுமக்களைக் கொதித்து எழச் செய்துள்ளது.
காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கொலை செய்யப்பட்ட 3 பெண்களும் கொலையாளிகளின் சதிச்செயலில் சிக்கி, சொகுசு வீட்டிற்கு வரவழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்ததுடன், சுமார் 45 பேர் கொண்ட இன்ஸ்டாகிராம் குழுவிற்கு நேரலையில் ஒளிப்பரப்பியதை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், குற்றச்செயலில் ஈடுபட்ட 12 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதனிடையே, குற்றம்சாட்டப்பட்ட 3 பெண்களுக்கும், போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்க, அது மக்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.
போதைப்பொருளை திருட நினைத்தால் இதான் கதி எனக் கொலைகார கும்பல் தலைவன் பேசிய ஆதாரம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவிக்க, அது விவாத பொருளாக மாறியுள்ளது. கொலை செய்யப்பட்ட மூன்று பெண்களும் விலை மாதர்கள் என ஊடங்களும் செய்தி வெளியிட, பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சுமத்தும் நிலை என்றுதான் மாறுமோ? என மக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதோடு விட்டுவிடாமல், நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி சென்ற ஆயிரக்கணக்கான மக்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அதிபர் மிலெய் தலைமையிலான அரசு கடைப்பிடிக்கும் முதலாளித்துவ கொள்கையே இது போன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம் என்றும் மிலெய் ஆட்சிக்கு வந்தபிறகு நாட்டில் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் உச்சத்தில் உள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.
மனிதக் கடத்தல், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் திட்டத்தை மிலெய் கைவிட்டு விட்டதாகவும், போதைப்பொருள் கும்பல்கள் அட்டூழியத்தில் ஈடுபடுவதற்கு அதிபர் மிலெயின் அஜாக்கிரதையே காரணம் என்றும் குற்றம் சுமத்துகின்றனர். குற்றங்களை கட்டுப்படுத்தாமல் திரைமறைவில் உதவும் வேலையில் அரசு ஈடுபட்டால் விளைவுகள் வேறுமாதிரி இருக்கும் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.