தொழில்நுட்பங்களில் புதுமையைப் புகுத்துவதில் சீனா அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதமாகச் சீனாவில் போர்டபிள் ரோபோ கால்களைச் சோதித்த அமெரிக்கர் ஒருவர் அதன் செயல்பாடுகளைக் கண்டு பிரமித்துப் போயிருக்கிறார். அது என்ன தற்போது பார்க்கலாம்.
சர்வதேச அளவில் அறிவியலின் அபார வளர்ச்சியால் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்கள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. ஏஐ வந்த பிற்பாடு ஏற்கனவே உள்ள தொழில்நுட்பங்கள் புதிய அவதாரத்தை எடுத்து வருகின்றன… அப்படியொரு சம்பவம்தான் சீனாவில் நடந்தேறியிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த கண்டென்ட் கிரியெட்டடர் கிறிஸ்டியன் க்ரோஸி என்பவர், சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜியே தேசிய பூங்கா பகுதிக்குச் சென்றிருக்கிறார்… அங்கு பூங்காவைச் சுற்றிப்பார்க்க வரும் பார்வையாளர்கள் களைப்படைவதை தடுக்கும் வகையில், சுற்றிப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் robotic legs எனப்படும் ரோபா கால்கள் வைக்கப்பட்டிருந்தன.
வாடகையாகச் சுமார் 2000 ஆயிரம் ரூபாயாவும், சொந்த உபயோகத்திற்கு என்றால் 84 ஆயிரம் ரூபாய்க்கும் கிடைக்கின்றன. அதை அறிந்து கொண்ட கிறிஸ்டியன் க்ரோஸி, robotic legs ஷோரூமுக்குள் சென்று அதன் சிறப்பம்சத்தைக் கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார். ரோபோ கால்களைச் சோதித்து பார்த்துப் பிரமித்து போன அவர், தனது ஆச்சரியமான அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பகிர்ந்திருக்கிறார். இது எனக்காகவே நகர்கிறது என்று வியப்போடு பேசும் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இடுப்பையும், கால் முட்டியையும் இணைக்கும் வகையில் பொருத்தப்படும் இந்த ரோபோ கால்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் நடப்பதை எளிதாக்குகின்றன. நிகழ்நேரத்தில் நமது அசைவுகளுக்கு ஏற்பத் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் robotic legs, நம் கால்கள் தானாகவே நடப்பதற்கான உந்து சக்தியை வழங்குகின்றன. நடப்பதற்கு சிரமப்படும் நபர்கள் அல்லது நடைபயணம் போன்ற கடினமான செயல்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு இந்தப் புதுமையான கருவி மிகவும் உபயோகப்படும் என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
செப்டம்பர் 25ம் அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ ஒரு கோடியே 70 லட்சத்திற்கும் மேலான பார்வைகளை கடந்துள்ளதோடு, 8 லட்சத்திற்கும் மேலானோரின் விருப்பங்களையும் பெற்றிருக்கிறது… கிறிஸ்டியன் க்ரோஸியின் இன்ஸ்டாகிராம் வீடியோ உடற்பயிற்சி நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதை வாங்கி உபயோகப்படுத்துவதற்கான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளன.
வயதானவர்களுக்கும், குறைபாடுகள் உடையவர்களுக்கும் ரோபோ கால்கள் ஒரு வரப்பிரசாதம் என்கிறார்கள் இணையதளவாசிகள். அதே நேரத்தில் சீனா உலகின் முன்னணி மற்றும் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதாகவும், அமெரிக்கா இதனை விரைவில் உணரும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.