அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
வடக்கு கரோலினா மாகாணத்தின் சவுத் போர்ட் நகரில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள உணவகங்கள் ஏராளம். இசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தவாறு உணவு சாப்பிடும் நடைமுறை இங்கு மிகவும் பிரபலம்.
குறிப்பாக இரவு நேரங்களில் மதுபான கூடமாகவும் இந்த உணவகங்கள் செயல்படுவதால், கூட்டம் கட்டியேறும். அப்படியொரு, நிகழ்வின்போது தான் இந்தக் கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. சவுப்போர்ட் நகரில் நீர்நிலையை ஒட்டி அமைந்துள்ள உணவகத்தில், வழக்கம்போல் ஏராளமான உணவுப் பிரியர்கள் குவிந்திருந்தனர்.
இசைநிகழ்ச்சியில் பாடல்களை ரசித்துவாறு அவர்கள் உணவை ருசித்துக் கொண்டிருக்க, திடீரேன துப்பாக்கி குண்டுகள் அங்குள்ள பொருட்களைத் துளைக்க தொடங்கின. என்ன நடக்கிறதென்றே தெரியாமல், மக்கள் அலறியடித்து ஓட, சிலருக்கு தலை மற்றும் முதுகு பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க, 8-க்கும் மேற்பட்டோர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், கடலோரத்தில் பயணித்த படகு ஒன்று, தங்களது உணவகத்தை நோக்கி மிக வேகமாக வந்ததாகவும், அதில் இருந்த நபர்கள் ஈவு இரக்கமின்றி துப்பாக்கிச்சூடு நடத்தியதாவும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைவதற்குள், தாக்குதல் நடத்திய மனித மிருகங்கள், படகில் சிட்டாகப் பறந்து மாயமாகிவிட்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சந்தேகத்திற்குரிய ஒருவரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
OAK தீவில் நிறுத்தப்பட்டிருந்த படகும், துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு பயன்படுத்தப் படகும் ஒரே மாதிரியாக இருந்ததால், அதனையே துருப்புச் சீட்டாகக் கொண்டு போலீசார் விசாரணையை வேகப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே சவுத்போர்ட் பகுதியில் வசிக்கும் மக்கள், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், சந்கேத்திற்குரிய நபர்கள் யாரும் நகரை சுற்றி வருவது தெரிந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அண்மைகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நடப்பாண்டில் மட்டும் 320 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறியிருப்பது அமெரிக்காவை எந்த நிலைக்குத் தள்ளுமோ என வேதனை தெரிவித்துள்ளனர்.