இத்தாலியின் முதல் பெண் பிரதமரான மெலோனி எழுதியுள்ள சுயசரிதை வெறும் சுயசரிதை அல்ல, இது அவரது மனதின் குரல் என்று அந்நூலுக்கான முன்னுரையில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையுடைய ஜார்ஜியா மெலோனி I Am Giorgia — My Roots, My Principles:“நான் ஜார்ஜியா – என் வேர்கள், என் கொள்கைகள்” என்ற தலைப்பில் தனது சுய சரிதையை எழுதியுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக மெலோனி இருந்தபோது இத்தாலியில் எழுதப்பட்ட இந்நூல், விற்பனையில் புதிய சாதனையைப் படைத்தது.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மூத்த மகனான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரின் சிறு முன்னுரையுடன் இந்நூலின் அமெரிக்கப் பதிப்பு வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரதமர் மோடியின் முன்னுரையுடன் I Am Giorgia — My Roots, My Principles:“நான் ஜார்ஜியா – என் வேர்கள், என் கொள்கைகள்” என்ற நூலின் இந்தியப் பதிப்பு ரூபா பப்ளிகேஷன் சார்பில் விரைவில் வெளியாகவுள்ளது.
தேசபக்தரும் சிறந்த சமகாலத் தலைவருமான ஜார்ஜியா மெலோனியின் சுய சரிதை நூலுக்கு முன்னுரை எழுதியது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய மரியாதை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் தான் பல உலகத் தலைவர்களுடன் உரையாடியதாகவும், அவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக் கதைகளைத் தாண்டி, பெரிய செய்திகளைக் குறிப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்..
பிரதமர் மெலோனியின் வாழ்க்கை ஒருபோதும் அரசியல் அல்லது அதிகாரத்தைப் பற்றியதாக இருந்ததில்லை என்று பாராட்டியுள்ள பிரதமர் மோடி, தைரியம், உறுதிப்பாடு மற்றும் பொது சேவை மற்றும் இத்தாலி மக்களுக்கான அர்ப்பணிப்பு ஆகியவையே மெலோனியின் அரசியல் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தாலியின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்றதும் அவர் எப்படி ஆட்சி நடத்துவாரோ என்ற சந்தேகமும் கேள்வியும் பலருக்கும் எழுந்தது.
ஆனால், தனது தேசத்துக்கு வலிமையையும் ஸ்திரத்தன்மையையும் வழங்கியுள்ள மெலோனி, எப்போதும் நடைமுறைக்கு ஏற்றவராகவும், உலகளாவிய நன்மையை மேம்படுத்துவதில் உறுதியாகவும் இருந்து வருகிறார் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இத்தாலியின் நலன்களுக்காகத் தெளிவுடன் குரல் கொடுத்து வரும் மெலோனி, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகின் சவால்களுக்கும் தெளிவான பொறுப்புணர்வுடன் நல்ல நோக்கத்துடனும் செயல்பட்டு வருவதாகப் பிரதமர் மோடி தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
உலக அரங்கில் நம்பிக்கையுடன் தனது தேசத்தை வழிநடத்தும் அதே வேளையில், தனது வேர்களை மெலோனி உறுதியாகப் பற்றிக் கொண்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அதனால்தான் மெலோனியின் பயணக் குரல் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது என்று கூறியுள்ளார். குறிப்பாக, தாய்மை, தேசிய அடையாளம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அவரது நோக்கம் இந்தியாவில் வாசகர்களிடம் எதிரொலிக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தனது மக்கள்மீதான மெலோனியின் இரக்கமும், தன் நாட்டு மக்களை அமைதி மற்றும் செழிப்புப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான மெலோனியின் கருத்துக்களும் அவரின் சுய சரிதை நூல் முழுவதும் எதிரொலிக்கின்றன என்றும் பிரதமர் மோடி சுட்டிக் காட்டியுள்ளார். கூடுதலாக, பாரம்பரியத்திற்கான மரியாதை மற்றும் நவீனத்துவத்தை ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றால் இந்தியா மற்றும் இத்தாலிக்கும் இடையே ஆத்மார்த் உறவு உள்ளன என்றும் அதுவே பிரதமர் மெலோனியுடனான தனது நட்பின் அடித்தளம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கும் பிரதமர் மெலோனிக்கும் இடையிலான நட்பு சமூக ஊடகங்களில் பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளன. இரு தலைவர்களும் பெரும்பாலும் வீடியோக்கள் மற்றும் செல்ஃபிகள் மூலம் தங்கள் நல்லுறவை வெளிப்படுத்தியுள்ளதை உலகம் பார்த்து வியந்துள்ளது.
















