பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. லட்சக்கணக்கானோர், பெருந்திரளாக அணிதிரண்டு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கான காரணம் என்ன ? விளைவுகள் என்னவாக இருக்கும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள Awami Action Committee-க்கும் அரசுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமல் முறிந்தன. அரசியலமைப்புத் திருத்தங்கள் என்பது ஒரு சில அமைப்புகளின் கோரிக்கைக்காக மூடிய அறையில் முடிவு செய்ய முடியாது என்று பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட அமைச்சர்கள் தெரிவித்த நிலையில், Awami Action Committee, “shutter-down and wheel-jam என்ற அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
பாகிஸ்தானில் குடியேறிய காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்ற இடங்களை ரத்து செய்ய வேண்டும்- காஷ்மீரின் அரசியலில் தேவையற்ற கட்டுப்பாட்டைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளவேண்டும்- நீர்மின் திட்டங்கள் உள்ளூர் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்- நீர்மின் திட்டங்களைக் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்-அத்தியாவசிய பொருட்கள் உட்பட மின் கட்டணங்களிலும் மானியங்கள் வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளைப் பாகிஸ்தான் அரசு நிறைவேற்றவில்லை.
இதன் காரணமாக ஒட்டுமொத்த மக்களும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மக்களின் கோபத்துக்கு பாகிஸ்தான்அரசுப் பதில் சொல்ல வேண்டும் என்று Awami Action Committee -ன் முக்கிய தலைவரான Shaukat Nawaz Mir, ஷௌகத் நவாஸ் மிர் எச்சரித்துள்ளார்.
வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்தவர்களும் மற்ற சமூக அமைப்புகளும் இந்த “shutter-down and wheel-jam போராட்டத்துக்குத் தம் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டதைக் கட்டுப்படுத்த இஸ்லாமாபாத்திலிருந்து 1,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினரையும், பஞ்சாப் மாகாணத்தில் இருந்து துணை ராணுவப் படையினரையும் பாகிஸ்தான் அரசு அனுப்பி வைத்துள்ளது.
இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இயற்கை வளங்களை வெட்டி எடுப்பதற்காகப் பாகிஸ்தான் அரசு கொண்டுவந்த தனி சட்ட மசோதாவை எதிர்த்தும் மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன. பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அரசின் வர்த்தக கொள்கைகள் இப்பகுதியின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும்அழிப்பதாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பாகிஸ்தான் அரசு நடந்து கொள்ளும் விதத்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் GEN Z தலைமுறையினர் விரக்தியடைந்துள்ளனர். மேலும், பஞ்சாப்புடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைக்கும் பாகிஸ்தான் அரசின் நிர்வாக முடிவையும் இப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர், எங்கே தங்கள் காஷ்மீர் அடையாளம் அழிந்துவிடுமா என அஞ்சும் இளைய தலைமுறையினர், இந்தியாவுடன் இணையவேவிரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளில் புலம்பெயர்ந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வம்சாவளியினர் இந்தப் பிரச்சினையில் சர்வதேச போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தப் போராட்டத்தைப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அரசு கையாளும் முறையிலே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எதிர்காலம் உள்ளது. இது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் இராஜதந்திரத்துக்கு வைக்கப்பட்ட கஷ்டமான பரீட்சை என்றும், அதில் அவர் தேர்ச்சி பெறுவது கஷ்டம் என்றும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
















