சென்னை பல்லாவரம் அருகே அமைந்திருக்கும் திருநீர்மலை பெரிய ஏரியைத் தூர்வாரும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. ஏரியைச் சுற்றி குவிக்கப்பட்டிருக்கும் இறந்த மீன்களில் இருந்து வரும் துர்நாற்றம், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உருவாக்குவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்தத் திருநீர்மலை பெரிய ஏரி தமிழக அரசின் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆரம்பகாலத்தில் 194 ஏக்கராக இருந்த இந்த ஏரியின் பரப்பளவு தொடர் ஆக்கிரமிப்பின் காரணமாக 146 ஏக்கராகக் குறைந்துள்ளது. தாம்பரம், சானடோரியம் மெப்ஸ் வளாகம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்தத் திருநீர்மலை பெரிய ஏரியில் தான் கலந்து வருகிறது.
கழிவுநீர் கலப்பதால் ஏரி நீர் மாசடைந்திருப்பதோடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நிலத்தடி நீரின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்களால் பாடப்பட்ட இந்தப் பெரிய ஏரி நாசமடைவதை தடுத்து நிறுத்தி, தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என ஏரி பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து போராடி வந்த நிலையில், 5.15 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் தொடங்கின.
ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், கொத்து கொத்தாகச் செத்து மிதக்கும் மீன்களால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுவதாகப் புகார் எழுந்துள்ளது. ஏரியில் செத்து கிடந்த மீன்களை சேமித்து வைத்து அரைகுறையாகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் போட்டு மூடுவதாலும், கரையில் கொட்டப்பட்டிருக்கும் ஆகாயத் தாமரையின் கழிவுகளாலும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஐந்து மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கிய தூர்வாரும் பணி, மழைகாலம் தொடங்கும் நிலையிலும் மந்தகதியில் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏரியைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் ஏரியை கடந்து செல்லும் மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள உணவகங்களிலும் யாரும் உணவருந்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஏரியை தூர்வாருகிறோம் எனும் பெயரில் கோடிக்கணக்கில் நிதியை ஒதுக்கிய நிலையிலும் அப்பணிகள் முடிக்கப்பெறாமல் இருப்பது பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.
விரைவில் மழைகாலம் தொடங்கவிருக்கும் நிலையில் தூர்வாரும் பணியை வேகப்படுத்துவதோடு, கரையோரம் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.