சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களை சாதகமாகப் பயன்படுத்தி விலையுயர்ந்த மொபைல்போன்களை திருடும் ஹவாரியாஸ் கும்பலை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட பாணியில் மேலும் பலரை கைது செய்ய ஜார்கண்டில் ரயில்வே பாதுகாப்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.
சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், கரூர், காட்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தியும் நள்ளிரவு நேரங்களிலும் ஒரு திருட்டுக் கும்பல் தங்களின் கைவரிசையை காட்டி வந்தது. காவல்துறையே திணறும் அளவுக்குத் துல்லியமாகத் திட்டமிட்டு உயர்ந்த ரக மொபைல்போன்களை திருடுவதையே இக்கும்பல் வாடிக்கையாகக் கொண்டிருந்தது.
ரயில்நிலையங்களில் ஆங்காங்கே சிசிடிவி கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டதன் பயனாகத் திருட்டுக் கும்பல் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹவாரியாஸ் கும்பல் எனத் தெரியவந்தது.
ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் அமைத்த தனிப்படை தன்னுடைய தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ்குமார், சிவக்குமார், ராஜத் மெக்டோ, ராகுல் சேக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த 60 செல்போன்களையும் தனிப்படை பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட ஹவாரியாஸ் கொள்ளை கும்பலிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து விமானம் மூலமாக வந்து சேலம் உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் முகாமிட்டு மக்கள் அதிகமாகக்கூடும் இடங்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி விலை உயர்ந்த மொபைல் போன்களை திருடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் திருடப்படும் மொபைல் போன்களை ஜார்கண்டுக்கு கொண்டு சென்று மென்பொருளில் மாற்றம் செய்து விற்பனை செய்துவிடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சேலத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த ஹாவாரியாஸ் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்திருக்கும் தனிப்படை மேலும் பலரை தேடி வருகிறது.
இந்த நால்வரின் மூலம் மேலும் பத்து பேரை கைது செய்ய ரயில்வே பாதுகாப்பு படையினர் ஜார்கண்டில் முகாமிட்டுள்ளனர். தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், அதனை சாதகமாகப் பயன்படுத்தி திருட்டுக் கும்பல் தங்களின் கைவரிசையை காட்டலாம் என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
















