சென்னையில் கைது செய்யப்பட்ட தவெகவின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் அக்கட்சியின் மத்திய மாநகர செயலாளர் பவுன்ராஜ் ஆகியோரை 15 நாட்கள் காவலில் வைக்கக் கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பலியாகினர். தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் 3 பேர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று இரவு தவெகவின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் தவெகவின் கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்தான் வேலுச்சாமிபுரம் தவெக பரப்புரைக்கு கொடிக் கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் கரூர் காவல் நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இருவரையும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.