தொடர் விடுமுறை காரணமாக உதகைக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறை, ஆயுதபூஜை பண்டிகையொட்டி உதகைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், உதகை-மேட்டுப்பாளையம் மலைப் பகுதியில் போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூரில் இருந்து உதகைக்கு வரும் வாகனங்கள் ஆவின் பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உதகை, கூடலூர், குன்னூர் மலைப் பாதைகளில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது.