கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் சிறிய வகை டராஸ் லாரிகள் போலி பாஸ் பெற்று செல்வதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரத்துடன் சென்ற ராட்சத டராஸ் லாரிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றத்தின் நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 700 சிறிய ரக டராஸ் லாரிகள் போலி பாஸ் பெற்று கனிம வளங்களை ஏற்றிச் செல்வதாக டாரஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
ஆரல்வாய்மொழி, ராயல் செக்போஸ்ட், களியக்காவிளை சோதனை சாவடிகளை கடந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும், குவாரிகள் ஒத்துழைப்போடு நடக்கும் முறைகேட்டால் ஒரு லோடுக்கு 6 ஆயிரத்து 600 ரூபாய் வரை லாரி உரிமையாளர்கள் லாபம் பார்ப்பதாகவும் கூறியுள்ளனர்.
போலி பாஸ் நடைமுறையால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு 13 லட்சத்து இருபதாயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் முறையான பாஸ் வைத்திருப்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், போலி பாஸ் முறைகேட்டில் ஈடுபடும் கும்பலை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டராஸ் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.