6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்திருக்கிறது பரம் என்ற பஞ்சாப் இளம் பாப் பாடகியின் THAT GIRL பாடல்…. அப்படியென்ன விஷேசம் இந்தப் பாடலில் பார்க்கலாம் விரிவாக…
தகரைக் கூரைகள், இடிந்து விழும் வீடுகள் ஆகாயத்தை பார்த்திருக்க, சட்டென உரசிச் செல்வது போல் பறக்கும் விமானம்… கிட்டத்தட்ட சென்னையின் திடீர் நகர் போன்று காட்சியளிக்கும் நெருக்கமான சந்தில், குழந்தைகளுடன் வெளியே வந்து மால்வா பஞ்சாபியில் பாடுகிறார் பரம்ஜிம் கவுர்.
THAT GIRL என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த ஹிப்ஹாப் பாடல் ஆறு நாட்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. தற்போது இணையத்தை கலக்கி வரும் இப்பாடல், 19 வயது ராப்பரும், பாடகியுமான பரம் என்று அழைக்கப்படும் பரம்ஜித் கவுரினால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள டுனேகே என்ற அமைதியான கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்தப் பாடலை, பிரிட்டிஷ் தயாரிப்பாளர் மன்னி சந்து தயாரித்திருக்கிறார். மொகாலியில் படமாக்கப்பட்டு, தொழில்துறையின் முன்னணி நபர்களின் உதவியின்றி, கொலாப் கிரியேஷன்ஸ் என்ற சுயசார்பு லேபிளால் உருவாக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமாக, இந்தப் பாடல் சந்துவின் சமீபத்திய இந்தியா வருகையின் போது பஞ்சாபில் உள்ள ஒரு Airbnb-ல் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பாடலை நாங்கள் விலையுயர்ந்த ஸ்டுடியோவில் பதிவு செய்யவில்லை. வெளியே கார்களின் சத்தம் கேட்க முடிந்தது, ஆனாலும், குரல்கள் மிகவும் தெளிவாக இருந்தன.
நேர்மையாகச் சொன்னால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இது போன்ற அனுபவங்கள் அவ்வப்போது மட்டுமே நிகழ்கின்றன. 10 நிமிடங்களுக்குள், பாடலின் Vibe-ஐ நாங்கள் உணர்ந்துவிட்டதாகவும், இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் சந்து கூறுகிறார். வசீகரிக்கும் குரல், authentic tone, powerful singing போன்றவை பரமின் தனித்துவத்தை காட்டுகிறது.
பஞ்சாபில் பாப் பாடல்களில் பெரும்பாலும் பெண்கள் துணை பாடகர்களாகவே உள்ள நிலையில், பரம், வட்டார மொழியில் பாடல்களை இயற்றியிருப்பது மிகுந்த கவனத்தை பெற்றிருக்கிறது. தாயார் வீட்டு வேலை செய்பவராகவும், தந்தை தினக்கூலி தொழிலாளியாகவும் இருக்கும் டூனேக்கில், அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும்போது ராப் இசையில் ஆர்வம் காட்டினார் பரம்.
மோகாவில் உள்ள டி.எம் கல்லூரியில் இசையை ஒரு பாடமாக எடுத்தபோது அவருக்கு இசையின் மீதான ஆர்வம் அதிகரித்தது. “அவர் பள்ளியில் சிறந்த பாடகி இல்லை, ஆனால் காலப்போக்கில் அது மாறியது.
தனது சொந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பரம் அடிக்கடி ஒரு கிட்டரைப் பிடித்துக்கொண்டு, மொட்டை மாடியில் தனியாக – பெரும்பாலும் சதீந்தர் சர்தாஜ் மற்றும் சித்து மூஸ்வாலாவின் பாடல்களைப் பாடுவதைப் பதிவு செய்வார். இப்பாடல் பிரபலமான நிலையில், தனது பெற்றோருக்கு சரியான வீடு கட்ட வேண்டும் என்பதே பரமின் ஆசை.