காசா போரை நிறுத்தும் 20 அம்ச திட்டத்திற்கு பாகிஸ்தான் 100 சதவிகித ஆதரவு அளித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், நாங்க அப்படி சொல்லவே இல்லையே என்று யு டர்ன் அடித்துள்ளது பாகிஸ்தான்…. காரணம் என்ன விரிவாகப் பார்க்கலாம்.
இஸ்ரேல் – காசா போருக்கு முற்றுப்புள்ளி 20 அம்ச திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்… அதன்படி போர் நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுவிப்பு, இஸ்ரேலிய துருப்புகள் படிப்படியாகக் காசாவில் இருந்து வெளியேறுதல் உள்ளிட்டவற்றை முன்மொழிகிறது.
இத்திட்டத்திற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்திருந்தன. குறிப்பாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர் இருவரும் அமைதி திட்டத்திற்கு 100 சதவிகிதம் ஆதரவு அளித்திருப்பதாகக் கூறியிருந்தார் டிரம்ப். அமைதி ஒப்பந்தத்தில் ஹமாஸ் கையெழுத்திடாவிட்டால் விளைவுகளை விபரீதமாகும் என்று எச்சரிக்கை விடுக்கவும் அவர் தவறவில்லை.
ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் கூற்றைத் திட்டவட்டமாக மறுக்கும் வகையில், நாங்கள் அப்படி சொல்லவே இல்லையே என்று யு டர்ன் அடித்துள்ளது பாகிஸ்தான்…. இதுதொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார், 8 இஸ்லாமிய நாடுகளால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் சேர்க்கப்படாவிட்டால், காசா போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் அமைதி திட்டம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் சுட்டிக்காட்டியது தங்களது ஆவணம் அல்ல என்று மறுத்துள்ள இஷாக் தார், அமைதி திட்டம் தொடர்பான டிரம்பின் அறிவிப்பை, அவர்கள் தரப்பிலிருந்து ஒரு அறிவிப்பாக மட்டுமே கருத வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தாரின் இந்தக் கூற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் இருவரும் அமைதி திட்டத்திற்கு 100 சதவிகிதம் பின்புலமாக இருந்தனர் என்ற டிரம்ப்பின் கூற்றுக்கு முற்றிலும் எதிர்மறையாக உள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து முறையாகப் பாதுகாக்கப்படும்வரை இஸ்ரேலிய படைகள் காசா எல்லைக்குள் இருக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு முன்மொழிந்த மாற்றங்கள்தான் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பகுதியான காசாவில் இடர்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதே ஐ.நா. பொதுச்சபையில் பங்கேற்பதற்கான முக்கிய நோக்கம் என்று இஷாக் தார் கூறியிருப்பதன் மூலம், டிரம்பின் அமைதி ஒப்பந்தத்தைப் பாகிஸ்தான் முற்றிலும் நிராகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
















