கரூர் சம்பவம் போன்ற பெருந்துயரங்களை தடுக்க அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு வழிகாட்டு நடைமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாகச் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜயின் பெயர் சேர்க்கப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் ஏழு மணி நேரம் தாமதமாக வந்ததே அசம்பாவிதம் ஏற்பட காரணம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தச் சம்பவத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ போன்ற நிகழ்ச்சிகளுக்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நெறிமுறைகளை மீறும் பட்சத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும், சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு அக்டோபர் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.