இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற ஏழு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. உள்நாட்டிலேயே உருவாக்கப்படவுள்ள ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் சிறப்புகள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
‘ADVANCED MEDIUM COMBAT AIRCRAFT’… சுருக்கமாக ‘AMCA’… தமிழில் ‘நவீன நடுத்தர போர் விமானம்’ என்றழைக்கப்படும் AMCA-தான் இந்தியா தயாரிக்கப்போகும் ஐந்தாம் தலைமுறை STEALTH FIGHTER. எதிரி நாட்டு RADAR-களில் சிக்காமல் ஊடுருவிச் சண்டை செய்யும் விமானங்களுக்கு STEALTH FIGHTER என்று பெயர்.
சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலவில் 125 நவீன நடுத்தர போர் விமானங்களை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா உருவாக்கப் போகும் முதல் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள், அமெரிக்காவின் F-22, F-35, சீனாவின் J-20, ரஷ்யாவின் Su-57-ஐப் போன்று நவீன தொழில்நுட்பங்களையும் ஆயுதங்களையும் கொண்டிருக்கும்.
முதற்கட்டமாக ஒற்றை இருக்கை மற்றும் இரட்டை ENGINE-கள் கொண்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளன. ஏழாயிரம் கிலோ எடைகொண்ட ஆயுதங்களையும், ஆறாயிரத்து 500 கிலோ எரிபொருளையும் சுமந்தபடி 55 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் பெற்றவையாக ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் VERSION-ல் அமெரிக்கா தயாரித்த GE F 414 ENGINE-ம் இரண்டாவதில் இந்தியா தயாரித்த ENGINE-ம் பயன்படுத்தப்படும் எனத்தெரிகிறது. அது அமெரிக்க ENGINE-விட அதிக திறன்கொண்டதாக இருக்குமென்றும் கூறப்படுகிறது. DRDO வடிவமைத்துள்ள இந்தத் திட்டத்தில் இணைய இந்திய நிறுவனங்கள் முன்வர வேண்டுமென மத்திய அரசு அழைப்புவிடுத்தது. அதை ஏற்று TATA ADVANCED SYSTEMS LTD, HINDUSTAN AERONAUTICS LIMITED, ADANI DEFENCE உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள், DRDO உடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க முன்வந்துள்ளன.
அவை சமர்ப்பித்துள்ள ஒப்பந்தப்புள்ளிகளை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. அவர்கள் தரும் பரிந்துரையின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகம் இறுதி முடிவை எடுக்கும். தற்போதைய நிலவரப்படி இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
2035-ஆம் ஆண்டுக்குள் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் AIR FORCE-ல் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று கால தாமதம் ஏற்படும் எனத்தெரிகிறது. பிரான்ஸிடம் இருந்து 63 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியா வாங்கப்போகும் 26 ரபேல் விமானங்கள் இந்த இடைவெளியை ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர கடந்த பத்தாண்டுகளில் MAKE IN INDIA திட்டத்தின் கீழ் ஏவுகணைகள் உள்பட பல்வேறு ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் இந்தியாவின் பலம் என்ன என்பதை உலகுக்கு உணர்த்திவிட்டது. அதை மேலும் வலுப்படுத்தி வல்லரசாக உருவெடுக்கும் பயணத்தின் ஒரு பகுதிதான் இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்.