கன்னியாகுமரியில் நவராத்திரி திருவிழாவையொட்டி பகவதி அம்மன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரியின் 10-ம் நாளன்று பாணாசூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் எலுமிச்சை மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் நண்பகலில் கோயிலில் இருந்து மகாதானபுரம் நோக்கிப் பகவதியம்மன் பரிவேட்டைக்கு ஊர்வலமாகப் புறப்பட்டார். அப்போது போலீஸார் துப்பாக்கி ஏந்தி நின்று அணி வகுப்பு மரியாதை செலுத்தினர்.
இந்த ஊர்வலத்தின் போது வழி நெடுக நூற்றுக்கணக்கான கலைஞர்களின் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைச் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
பின்னர் பரிவேட்டை ஊர்வலத்துக்கு புறப்பட்ட பகவதியம்மனை நோக்கி ஓம் சக்தி பராசக்தி எனக் கோஷங்களை எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.