இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்படவிருந்த அரசுப் பள்ளி ஒன்று, சர்வதேச அளவில் சிறந்த பள்ளிக்கான விருதை வென்று சாதித்துள்ளது. குறிப்பிட்ட அரசுப் பள்ளி எங்கு உள்ளது. சாதித்து காட்டியது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் கேட் தாலுகாவில் உள்ள ஜலிந்தர்நகர் ஜில்லா பரிஷத் பள்ளிதான் T4 கல்வி அமைப்பால் கௌரவிக்கப்பட்ட இந்தியாவின் ஒரே அரசுப் பள்ளி என்று அங்கீகாரத்தை பெற்றுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை மூன்றாகக் குறைந்தது. மாநில விதிமுறைகளின்படி 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் மூடப்படுவது வழக்கமான நடைமுறைதான்.
அப்படித்தான் இந்தப் பள்ளியும் மூடு விழாவை நோக்கிய பயணத்தை எதிர்கொண்டது…எனினும் உள்ளூர் சமூகத்தின் ஒத்துழைப்பு, தொலைநோக்கு திட்டங்கள் கைகொடுக்க, மூடுவிழாவில் இருந்து தப்பிப்பிழைத்த இந்தப் பள்ளி, விதையில் இருந்து விருட்சமாகச் செழித்து வளரத் தொடங்கியது.
இங்கு 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்புவரை 120 மாணவர்கள் படித்து வரும் நிலையில், கற்பித்தலில் புதுமை, சமூக தாக்கம் மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற நடைமுறைகளுக்காகச் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது இந்தப் பள்ளி.. உலகளவில் 50 பள்ளிகள் T4 கல்வி அமைப்பால் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவையனைத்தையும் பின்னுக்கு தள்ளி, Global Community Choice விருதை வென்று நம் முன் நிற்கிறது. இதன் மூலம் ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை உலகளவில் ஊக்குவிக்கும் T4 கல்வி அமைப்பின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
குறிப்பாக மூத்த மாணவர்கள், இளைய மாணவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களுக்கே கற்பித்துக் கொள்ளும் பாங்கும், வகுப்பறையில் கற்பிக்கப்பட்டதை பிற மாணவர்களுடன் கலந்துரையாடும் தன்மையும், இந்த அரசுப் பள்ளியைத் தனித்துவமாக அடையாளப்படுத்தியதால் சர்வதேச விருது தேடி வந்துள்ளது. விருது பெற்ற அரசுப் பள்ளியைப் பாராட்டியுள்ள மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார், இந்தச் சாதனை மகாராஷ்டிராவிற்கு பெருமையான தருணம் என்று கூறியிருக்கிறார்.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒருங்கிணைந்த முயற்சியால், பள்ளி மாநிலத்திற்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் முன்மாதிரியாக மாறியிருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.
பெற்றோர், ஆசிரியர்கள், கிராம மக்கள், சமூக தன்னார்வலர்கள் மற்றும் பலரின் கூட்டு முயற்சியால் பள்ளிக்குக் கௌரவம் கிடைத்திருப்பதாகக் கூறுகிறார் பள்ளி முதல்வர் Dattatray Ware…எந்தவொரு சமூகத் திட்டமும் வெற்றிபெற, நம்பிக்கை முக்கியமானது என்றும், நேர்மையான, தன்னலமற்ற பணிகளில் இருந்து மட்டுமே நம்பிக்கை பிறப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஒரு சமுதாயம் நினைத்தால், இது போன்ற பள்ளிகள் எளிதாக உச்சத்தை தொட முடியும் என்பதற்கு புனேவில் உள்ள புரட்சிப் பள்ளியே சான்று.