உலக பணக்காரரான எலான் மஸ்க் அரை டிரில்லியன் டாலர் செல்வத்தைச் சம்பாதித்த முதல் நபர் என்ற அந்தஸ்தை பிடித்துள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் போர்ப்ஸ் நாளிதழ், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இந்தப் பட்டியலில் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓவும், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வரலாற்றில் அரை டிரில்லியன் செல்வத்தை நெருங்கிய முதல் நபர் என்ற அந்தஸ்தை எலான் மஸ்க் பிடித்தார். டெஸ்லா நிறுவன பங்குகள் விலை உயர்வு, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஏஐ நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்ததே, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு உயரக் காரணம் ஆகும்.
கடந்த புதன்கிழமை மட்டும் மின்சார கார் தயாரிக்கும் டெஸ்லாவின் பங்குகள் கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்ந்ததால், எலான் மஸ்க் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்க வழி வகுத்தது.
அதுவே தற்போது உலகம் இதுவரை கண்டிராத பணக்காரர் என்ற இடத்தை எலான் மஸ்க் பிடிக்கக் காரணமாகியுள்ளது. ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் 8,800 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.