சேலத்தில் ஆயுத பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட வாழை மரங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டிச் சேலம் மாநகரில் வாழை மரங்கள், பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வியாபாரிகள் விற்பனை செய்தனர். பல்வேறு கிராமங்களிலிருந்து வந்த வியாபாரிகள் விற்பனையாகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டி சென்றனர். 200க்கும் மேற்பட்ட இடங்களில் வாழை மரங்கள், வாழைக்கன்றுகள் குவிக்கப்பட்டு இருந்தன.
இது தொடர்பாகப் புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய பொதுமக்கள் கூடுதலாகத் தூய்மை பணியாளர்களை நியமித்துக் கழிவுகளை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே கழிவுகளாகக் கொட்டப்பட்டுள்ள வாழை மரங்களிலிருந்து இலைகளை ஹோட்டல் ஊழியர்கள் எடுத்துச் செல்வதாகவும் இதனைத் தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.