தலைநகரை தெஹ்ரானில் இருந்து, ஓமன் வளைகுடா அருகே உள்ள கடலோர பகுதிக்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மீண்டும் தெரிவித்துள்ளார். ஈரான் தனது தலைநகரை மாற்றுவதற்குப் பின்னணி என்ன என்பது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.
அல்போர்ஸ் மலைத்தொடரின் அடிவாரத்தில், பாரசீக நாகரிகத்தின் தொட்டிலாகக் கம்பீரமாக காட்சியளிக்கும் தெஹ்ரானில் 1.8 கோடி பேர் வசிக்கிறார்கள். இது தவிர சுமார் 20 லட்சம் பேர் தினசரி தெஹ்ரானுக்கு வந்து செல்கிறார்கள் என்றும் கூறப் படுகிறது.
1979-ல் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, தலைநகரை தெஹ்ரானிலிருந்து மாற்ற வேண்டும் என்று பலமுறை திட்டமிடப் பட்டாலும், நிதி நெருக்கடி காரணமாகத் தலைநகரை மாற்றும் யோசனையை ஈரான் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. இந்தச் சூழலில் கடந்த ஆண்டு, அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தலைநகரை மாற்றும் திட்டத்தை மீண்டும் முன்வைத்தார்.
பல ஆண்டுகளாகவே ஈரான் கடுமையான தண்ணீர் மற்றும் மின்சார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஈரானின் பாதிக்கும் மேற்பட்ட அணைகள் 40 சதவீதத்துக்கும் குறைவான கொள்ளளவு தண்ணீரையே கொண்டுள்ளன. மின் உற்பத்தி நிலையங்கள் சிதைந்து விட்டன. ஒரு நாளைக்குப் பல மணிநேர மின் தடைகள் கட்டாயமாகி விட்டன.இதனால் ஈரானில் அன்றாட வாழ்க்கையையும் தொழில்துறையையும் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரத் தட்டுப்பாடு, தீவிர காற்று மாசுபாடு ஆகியவற்றோடு தெஹ்ரானின் நிலம் மெல்லச் சரிந்து வருவது மிகப் பெரிய சவாலாக உள்ளது.
இந்த நிலச்சரிவுகள் எப்போது வேண்டுமானாலும் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. எனவேதான் தலைநகரை மாற்றும் முடிவை ஈரான் அதிபர் அந்நாட்டின் உச்சத் தலைவர் அயதுல்லா கொமேனியிடம் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தெஹ்ரானின் 60 சதவீத கட்டிடங்கள் நிலநடுக்கப் பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்று கூறியுள்ள ஈரானின் கட்டுமான மற்றும் வீட்டுவசதி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெஹ்ரானில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 அங்குலம் மண் புதைவதாகக் கண்டறிந்துள்ளனர்.
அதனால், இதனால் நகர உள்கட்டமைப்பு பணிகள் கிட்டத்தட்ட நிறைவேற்ற முடியாமல் போகிறது. மேலும், தொடர்ச்சியாக ஐந்து வறண்ட ஆண்டுகள் மற்றும் அதிக அளவிலான வெப்பத்திற்குப் பிறகு, தெஹ்ரானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வரலாறு காணத அளவு குறைந்த அளவை எட்டியுள்ளது.
2022 ஆம் ஆண்டு முதல் காற்று மாசுபாட்டால் நாடு முழுவதும் ஆண்டுதோறும் 20,800 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் தலைநகர் தெஹ்ரானில் மட்டும் 6,400 பேர் உயிரிழந்து வருவதாகவும் அந்நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. தெஹ்ரானில் உயரமான குடியிருப்புகளிலிருந்து குஸிஸ்தான் மற்றும் சிஸ்தான்-பலுசிஸ்தான் கிராமங்கள் வரை, பொறுத்துக்கொள்ள முடியாத வகையில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தலைநகரின் முக்கியமான பகுதிகளில் அவசரகால நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
வீடுகளில் தண்ணீர் குழாய்கள் சுழற்சி முறையில் மூடப்படும் என்றும் தெருக்குழாய் மற்றும் தண்ணீர் லாரிகள் மூலம் அளவான தண்ணீர் விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மழைப்பொழிவு சராசரியை விட 45 % குறைந்துள்ளது. பல மாகாணங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. மேலும், நிலத்தடி நீர் இருப்பில் 70 சதவீதத்துக்கும் அதிகமாகத் தீர்ந்துவிட்டதால் பல மாகாணங்களில் மண் புதைய ஆரம்பித்துள்ளது. நீர் பற்றாக்குறையின் விளைவாக ஈரான் எரிசக்தி நெருக்கடியையும் சந்தித்து வருகிறது.
கடந்த ஜூலையில் வடகிழக்கு ஈரான் உள்ளிட்ட ஈரானில் பல பகுதிகளில் மிகவும் கடுமையான நீர் மற்றும் மின்சார பற்றாக்குறைக்கு அரசும் அரசு அதிகாரிகளும் தான் காரணம் என்று மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிறார்கள். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவறான ஆட்சி தங்களுக்கு வேண்டாம் என்றும், ஈரானின் மண்ணையும் நீரையும் அழிக்கும் ஒரு மதகுரு ஆட்சியைத் தாங்கள் விரும்ப வில்லை என்றும் மக்கள் கூறுகிறார்கள். கிணறுகளும் கால்வாய்களும் வறண்டு போவதால், சுற்றுச்சூழல் சார்ந்த இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது.
பல குடும்பங்கள் வேலைவாய்ப்பு, சேவைகள் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பைத் தேடி தெஹ்ரானுக்கு இடம் பெயர்கின்றன. இதனால் தெஹ்ரானின் மக்கள் தொகை பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது. ஈரானின் நீர், மின்சாரம் மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்க தலைநகரை மாற்றுவது சரியான முடிவில்லை என்றும் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாகும் என்றும் பெரும்பாலான ஈரான் மக்கள் தெரிவித்துள்ளனர்.
















