கேரளாவில் ஒழிக்கப்பட்டதுபோல தமிழகத்தில் தீண்டாமை இன்னமும் ஒழியவில்லை என்றும், நாள்தோறும் சமூக நீதிக்கு எதிரான சம்பவங்கள் நடப்பதை தமிழக செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், அருட்பிரகாச வள்ளலாரின் 202வது பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் சமரச சுத்த சன்மார்க்கத்தின் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆங்கிலேயர் ஆட்சியில் நாம் அடிமையாக இருந்தபோது 70 ஆயிரம் பேருக்கு படிக்க உரிமை வேண்டும் என மெட்ராஸ் கவர்னருக்கு வள்ளலார் கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டினார்.
சமூகம் பல பிரிவுகளாக பிரிந்து கிடந்த காலத்தில், வள்ளலார் ஒற்றுமையை வலியுறுத்தினார் என்றும், வள்ளலார் உருவாக்கிய பள்ளிகளில் எந்தவித வேறுபாடுகளும் இல்லை எனவும் கூறினார். வள்ளலார் நடத்திய பள்ளிகளில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
சுதந்திரத்திற்கு பிறகு கொள்கை அரசியல் இல்லாத காரணங்களால் வள்ளலாரின் இயக்கம் விரிவுபடுத்தப்படவில்லை என்றும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வள்ளலாரின் புகழை பரப்ப முன்னுரிமை கொடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும், நாள்தோறும் சமூக நீதிக்கு எதிரான சம்பவங்கள் நடப்பதை தமிழக செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்தார்.