புதுக்கோட்டை அருகே திமுக முன்னாள் அமைச்சர் ஆலங்குடி சுப்பையாவின் சமாதி உள்ள இடத்தை, வீட்டுமனை பட்டாவாக வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கரும்பிரான்கோட்டையை சேர்ந்த சுப்பையா என்பவர் 1967 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஆலங்குடியில் வெற்றி பெற்றவர்.
1969ல் கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது அறநிலையத்துறை, வீட்டுவசதி மற்றும் இடவசதி கட்டுப்பாடு துறைகளுக்குச் சுப்பையா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1976ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் சுப்பையா உயிரிழந்த நிலையில் கரும்பிரான்கோட்டையில் சுப்பையாவின் வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு இடத்தில் உடல் புதைக்கப்பட்டு சமாதி கட்டப்பட்டது.
காலப்போக்கில் இந்தச் சமாதி சிதிலமடைந்ததால் சில தினங்களுக்கு முன்பு சமாதியைச் சீரமைக்க சுப்பையாவின் குடும்பத்தினர் சென்றனர்.
அப்போது அங்கு வந்த ஒருவர், சமாதி உள்ள இடத்தில் அதிகாரிகள் தனக்கு வீட்டுமனை பட்டா வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், புதுக்கோட்டை வட்டாட்சியரிடம் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம், திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.