நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையின்போது தனியார் பல் மருத்துவமனையை தொண்டர்கள் சேதப்படுத்திய விவகாரத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். சேலம் சாலையில் கே.எஸ்.திரையரங்கம் முன்பு தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது அங்குக் கூடியிருந்த அக்கட்சி தொண்டர்கள் தனியார் பல் மருத்துவமனையின் மாடியில் செல்வதற்காகப் பெயர் பலகையை பிடித்து ஏறினர்.
இதில், பெயர் பலகை உடைந்து கீழே விழுந்ததில் மருத்துவமனையின் முன் பகுதியில் உள்ள மேற்கூரை சேதமடைந்தது.
இது தொடர்பாகத் தனியார் பல் மருத்துவமனை சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தவெக மாவட்ட செயலாளர் சதீஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காவல்துறையின் நிபந்தனைகளை மீறியது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.