அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தனை அடிப்படை வசதிகள் கேட்டுப் பொதுமக்கள் முறையிட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அந்தவகையில், 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், அமிர்தராயன்கோட்டை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராம அறிவுமையக் கட்டடம் கட்டும் பணியை பார்வையிட்டார்.
அமைச்சர் வருவதை அறிந்த மக்கள், மின்விளக்கு, சாலை, மழைநீர் வடிகால் எனப் பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறும், சாலையின் நடுவே இருக்கும் மின்கம்பத்தை அகற்றுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதனைக் கேட்ட அமைச்சர் மதிவேந்தன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.