மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பல்வேறு மாநிலங்களில் பக்தர்கள் வருகை தரும் நிலையில், கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கோயிலுக்கு விரைந்த மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் அங்குத் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அதன்படி நுழைவு வாயில் பகுதிகள், காத்திருப்பு அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது. 3 மணி நேர தேடுதலுக்கு பின் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்தியதோடு மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.