முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பதி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணி ஒப்பந்த ஊழியர் குப்பன், விஷவாயு தாக்கி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், மேலும், உடனிருந்த தூய்மைப் பணியாளர்கள்சங்கர் மற்றும்ஹரிஹரன் ஆகியோர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மூன்று தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பறிகொடுத்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை. தற்போது முதலமைச்சரின் சொந்தத் தொகுதியில் மீண்டும் ஒரு உயிரைப் பறிகொடுத்திருக்கிறோம்.
நாட்டிலேயே தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு, தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கிறது. பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யாமல், கையாலாகாத நிலையில் இருக்கிறது திமுக அரசு.
இனியும் இதை விபத்து என்று சொல்வது அர்த்தமற்றது. தூய்மைப் பணியாளர்களைப் படுகொலை செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும்.
உங்கள் கையாலாகாத்தனத்துக்கு இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுக்கப் போகிறீர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.