கரூர் சம்பவத்தில் பரப்புரைக்கு தாமதம் ஏற்பட்ட நிலையில் மேலும், மேலும் மக்கள் கூட அனுமதித்தது ஏன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் விவகாரத்தில் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை எக்ஸ் தள பக்கத்தில் மேற்கோள்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, இந்தச் சம்பவத்தில் அரசுக்குத் தொடர்பே இல்லை என்பது போலச் சில அரசியல் கட்சிகள் பக்கவாத்தியம் வாசிப்பதாகக் கூறியுள்ளார்.
நிகழ்ச்சி அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டிப் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்ட நிலையில் மேலும், மேலும் மக்களை கூட்ட பகுதிக்கு அனுமதித்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்படி கூட்டம் கூடுவதற்கு அனுமதித்து நெரிசலை ஏற்படுத்தியது ஏன் ? என்ற பல கேள்விகள் அரசு நிர்வாகத்தின் மீது எழுவது நியாயம் தானே எனக் கூறியுள்ளார்.
இதுபோன்ற நிகழ்வுகளுக்குச் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூட்டம் போட்டாரா? குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என ஆளும் திமுக அரசு செயல்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழத்தானே செய்யும் என்றும் கூறியுள்ளார்.