தமிழக அரசுக் கேபிள் டிவியில், தமிழ் தொலைக்காட்சி இடம்பெறுவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் ஊடகங்களின் கருத்து சுதந்திரத்திற்கு எழுந்துள்ள அச்சுறுத்தலைத் தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகை சுதந்திரத்தை பேணிக் காக்கும் வகையில், அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளையும் அரசுக் கேபிள் டிவியில் இணைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்ஜனம், புதிய தலைமுறை, ஆகிய செய்தி தொலைக்காட்சிகளை அரசுக் கேபிள் நெட்வொர்க்குகளில் இடம்பெற முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு இந்திய அரசியலமைப்பின்படி செயல்படும் ஊடகங்களை நசுக்கும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது என்றும், ஆளுகின்ற கட்சிக்கு எதிராக எழும்பும் எதிர்க்குரல்களை அடக்குவதற்கும், விமர்சனங்களை மறைப்பதற்கும் தமிழக அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை செயல்படுவது வருந்தத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அனைத்து தகுதிவாய்ந்த தொலைக்காட்சிகளுக்கும் அரசுக் கேபிள் இணைப்பில் தொடர முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.