திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால், பல்வேறு இடங்களில் பரவலாக மழை தொடங்கியுள்ளது. மேலும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் சக்தி என்று பெயரிடப்பட்டுள்ள புயலானது தீவிரமடைந்துள்ளதால், அக்டோபர் 9ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இன்று திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும், நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அக்டோபர் 8ம் தேதி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு என 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.