திருச்சியில் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு குற்றவாளிகளை மத்திய பிரதேசம் சென்று தமிழக போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த தங்க ஆபரணம் செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான 10 கிலோ தங்க நகை கடந்த 13ம் தேதி திருச்சி சமயபுரம் அருகே கொள்ளையடிக்கப்பட்டது. திண்டுக்கலில் உள்ள நகைக் கடையில் விற்பனையை முடித்து விட்டுத் திரும்பிச் சென்றபோது ஓட்டுநர் மற்றும் கடை ஊழியர் மீது மிளகாய் பொடியை தூவி இந்த துணிகர சம்பவம் அரங்கேறியது.
இதுகுறித்து நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகளை அமைத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ராஜஸ்தானை சேர்ந்த மங்கிலால் தேவாசி, விக்ரம் ஜாட் ஆகியோரிடம் நகைகள் இருப்பதை உறுதி செய்த தனிப்படை போலீசார், மத்திய பிரதேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் வைத்து இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து 9 கிலோ தங்க நகைகள், 3 லட்சம் ரொக்கம், ஒரு நாட்டு துப்பாக்கி ஆகியவற்றையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.