பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைவதை ஒட்டி இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பீகார் சட்டமன்றத் தேர்தலில் 7 கோடியே 43 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதிபடைத்தவர்கள் என கூறினார்.
இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம் பேரும், பெண்கள் 3 கோடியே 50 லட்சம் பேரும் அடங்குவர் என அவர் குறிப்பிட்டார். மூன்றாம் பாலினத்தவர் ஆயிரத்து 725 பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என ஞானேஷ்குமார் குறிப்பிட்டார். இந்த தேர்தலில் முதன் முறை 14 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவித்தார்.
பதிவான வாக்குகள் அனைத்தும் நவம்பர் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
அதன்படி முதல் கட்ட தேர்தலுக்கு வரும் 10-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும் எனவும் வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் அக்டோபர் 17ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாளான அக்டோபர் 18ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திரும்பப்பெற அக்டோபர் 20ம் தேதி கடைசி நாள் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல் பீகார் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் அக்டோபர் 13ம் தேதி தொடங்கும் எனக் குறிப்பிட்ட தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 20ம் தேதி எனக் கூறினார்.
அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 21ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும் எனவும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு அக்டோபர் 23ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.