ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த எப் – 16 ரக பாகிஸ்தான் போர் விமானங்கள் மற்றும் ரேடார்களை அமெரிக்கா பழுது நீக்கித் தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள ராணுவ உள்கட்டமைப்புகள் குறிவைத்து தகர்க்கப்பட்டன.
ஜகோபாபாதில் உள்ள ஷபாஸ் விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அமெரிக்க தயாரிப்பான, ‘எப் – 16’ ரக போர் விமானங்கள் இரண்டு சேதமடைந்தன. சேதங்களைச் சரிசெய்ய சீனா முன்வந்தபோது ‘எப் – 16’ ரக போர் விமானங்களின் தொழில்நுட்பங்கள் திருடப்பட்டு விடும் என அஞ்சிய அமெரிக்கா அதற்கு முட்டுக்கட்டை போட்டது.
எப் – 16 ரக விமானங்களை பழுது நீக்க அமெரிக்காவே உதவ வேண்டும் எனப் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அதிபர் டிரம்பை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து தோஹா, அபுதாபி மற்றும் அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் இருந்த அமெரிக்க சிறப்பு நிபுணர்கள் குழுவை டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது.
பாகிஸ்தானில் சேதமான ராணுவ உள்கட்டமைப்புகளை அமெரிக்கா சரிசெய்து தந்ததாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.