உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி B.R.கவாய் மீது, ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர், காலணியை வீச முயன்றார்.
விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்தபோது தலைமை நீதிபதி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சனாதனத்தை அவமதிப்பதா? எனக் கூச்சலிட்டு, வழக்கறிஞர் ராகேஷ், காலணி வீசித் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், தாக்குதல் நடத்த முற்பட்ட வழக்கறிஞரைத் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். இந்நிலையில், தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்று ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி B.R.கவாய் மீது காலணியை வீசித் தாக்க முயன்றதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய தலைமை நீதிபதி B.R.கவாயிடம் பேசியதாகவும், தலைமை நீதிபதி மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளதாகக் கூறிய அவர், நமது சமூகத்தில் இது போன்ற கண்டிக்கத் தக்க செயல்களுக்கு ஒருபோதும் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டபோது நீதிபதி கவாய் காட்டிய அமைதியை, தான் பாராட்டியதாகவும், அரசமைப்பை வலுப்படுத்தும் கவாயின் உறுதிப்பாட்டை இது காட்டுவதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.