டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு மற்றும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நெல் கொள்முதல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.
இந்த மாவட்டங்களில் விவசாயிகளின் நலனுக்காக 800க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் பல மாவட்டங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து, கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சாக்கு மற்றும் சணல் பற்றாக்குறையாலும், போக்குவரத்தில் ஏற்படும் இடர்பாடுகளாலும் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் நெல் கொள்முதல் சரிவர நடக்காததால் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே நெல் கொள்முதலில் ஏற்படும் பிரச்னைகளைக் களைந்து, பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.