மேற்குவங்கத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் டார்ஜிலிங் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.. நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கண்ணில் பட்டதையெல்லாம் வாரிச்சுருட்டிச் சென்ற காட்டாற்று வெள்ளம். நிலச்சரிவால் சிதைந்து போன சாலைகள்… வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள் என மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் இயற்கையின் கொடூமான சீற்றத்திற்கு பலியாகியுள்ளது.
இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவால் இமயமலையை ஒட்டியுள்ள மலை பிரதேசங்களான டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி போன்ற பகுதிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
வீடுகள், வாகனங்கள் மண்ணில் புதைந்துள்ளன. நிலச்சரிவால் மண்ணில் புதைந்து கிடக்கும் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்படுவது பெரும் துயரத்தை தருகிறது. பலரது நிலை என்னவென்று தெரியாத நிலையில் உறவினர்கள் விழிபிதுங்கியுள்ளனர்.
டார்ஜிலிங்கின் மிரிக் – சுகியேபாக்ரி மலைச்சாலையில் நிலச்சரிவால் போக்குவரத்து முடங்கிப்போயுள்ளது. தொலைதொடர்பு சேவைகள், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தசரா விடுமுறையை கழிக்க டார்ஜிலிங் பகுதிக்குச் சுற்றுலா சென்ற பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
அலிப்பூர்துவார் மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயமான ஜல்தபரா தேசிய பூங்காவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது… தோர்சா நதியில் காண்டாமிருகங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகளையும், கரையேறிய காண்டாமிருகத்தை மக்கள் துரத்துவதையும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களின் தாயகமான ஜல்தபாரா தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கான குடில்கள், மரப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் கும்கி யானைகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 160-க்கும் மேற்பட்டோர் படகுகள் மூலமும், கயிறு கட்டியும் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் வெள்ளம் புரட்டிப்போட்டிருந்தது.
தற்போது மேற்குவங்க மாநிலத்தை இயற்கை பேரிடர் சூழ்ந்துள்ளது… டார்ஜிலிங் நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, கனமழை, நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கள நிலவரம் பற்றி உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறியிருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவியையும் வழங்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளதாகவும் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்… நிவாரண பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ள நிலையில்,. விரைவில் அங்கு இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.