கொடைக்கானல் அருகே 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட்டை திறக்க வேண்டும் எனச் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்..
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கும்.
வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ந்து கொடைக்கானலுக்கு பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பயணிகளின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக, மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் இருந்து வந்தது.
வத்தலகுண்டு – கொடைக்கானல் பிரதான மலை சாலையில் மச்சூர் அருகே அமைந்துள்ள அந்த வியூ பாயிண்ட் கொரோனா காலத்தின்போது மூடப்பட்டது. இதனால், கடந்த நான்கு வருடங்களாக அங்கு செல்லப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வத்தலகுண்டு – கொடைக்கானல் மலைச்சாலை சுமார் 67 கிலோ மீட்டர் நீளமுள்ள நிலையில், இச்சாலையில் பயணிக்கும் மக்கள் மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் பகுதியில் இளைப்பாறி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
மேலும், அங்கு இயற்கை எழிலை கண்டு ரசித்தும், குடும்பத்துடன் நேரம் செலவிட்டும், புகைப்படம் எடுத்தும் மகிழந்து வந்தனர். இதனால், அப்பகுதியில் ஏற்படும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை குறைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் தொடர்ந்து மூடப்பட்டே இருப்பது சுற்றுலா பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, அதனை மீண்டும் திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இப்பூங்காவை திறப்பதினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேலும் சில சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளதாகவும், அவற்றையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.