நிதி தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் 6-வது சர்வதேச நிதி தொழில்நுட்ப மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நாளை பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். இந்த நிலையில், நேற்று இந்த மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஏஐ தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நிதி மற்றும் நிர்வாக துறையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், வரவேற்கத்தக்க இந்த முன்னேற்றத்தில் பல இருண்ட பக்கங்களும் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையிலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையிலும் இந்தியா உலகளவில் முன்னிலையில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.