பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டாவின் தமிழக பயண திட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.
2026 பேரவை தேர்தலை ஒட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற பெயரில் வரும் 12ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதில் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா பங்கேற்று பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
இதையொட்டி அவரின் பயண விவரங்கள் வெளியாகி உள்ளன.
வரும் 12ம் தேதி ஜெ.பி.நட்டா டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மதுரை விமானநிலையம் வருகிறார்.
பின்னர் அங்கிருந்து நேரடியாக தோப்பூர் செல்லும் அவர், அங்கு நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட உள்ளார்.
அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அவர், மதுரை விமான நிலைய பிரதான சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்க உள்ளார்.
அப்போது திண்டுக்கல் விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்ளை சந்தித்து அவர் உரையாட உள்ளார். பின்னர் மதுரை அண்ணா நகரில் உள்ள அம்பிகா திரையரங்கம் அருகே நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ஜெ.பி.நட்டா, பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.