அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக கனடா பிரதமர் மார்க் கார்னி புகழாரம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு 2வது முறையாக பயணம் மேற்கொண்ட கனடா பிரதமர் மார்க் கார்னி, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருநாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு, அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம், இஸ்ரேல்-காசா மோதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி, 2வது முறையாக வெள்ளை மாளிகையில் விருந்து அளித்த அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்தார். மத்திய கிழக்கில் அமைதியை நிலை நாட்ட டிரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சியை கனடா ஆதரிக்கும் என்றும், அதற்காக தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம் எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்கா – கனடா நாடுகள் இடையே சில மோதல்கள் இருந்தன என்றும், அதனை இருவரும் இணைந்து சரிசெய்வோம் எனவும் கூறினார். இருநாடுகளுக்கு இடையேயான வலுவான உறவு, வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே கனடா பிரதமர் மார்க் கார்னி ஒரு முக்கியமான விவகாரம் குறித்து பேச நினைப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, குறுக்கிட்டு பேசிய ட்ரம்ப், அமெரிக்காவுடன் கனடாவை இணைப்பது பற்றியதாக தான் இருக்கும் என கிண்டலாக தெரிவிக்க சிரிப்பலை எழுந்தது.